Saturday 27 February 2016

#தினம் ஒரு சிந்தனை......

விதைக்குள் விருட்சம் இருக்கிறது என கூறுவர்.....

இல்லை.....இல்லை.......

இது கவித்துவமான கற்பனையே.....

விதை விருட்சமாக பல வெளி காரணிகள் கண்டிப்பாக தேவை.....

அப்படியானால் விதைக்கு உள்ளிருப்பது என்ன.....??????

விருட்சமாக வேண்டும் என்ற வீரியம்.......!!!!!!
வேட்கை......!!!!!!!

ஒரு செடியோ மரமோ உயிர் வாழ நிலம்,நீர்,வெளிச்சம் தேவை......

ஆனால் ஒரு விதை உயிர் வாழ......
இது எதுவும் அவசியமில்லை.....

தனக்கான இடமும் உணவும் கிடைக்கும்வரை அவசரப்படாமல் காத்திருக்கிறது ஒரு விதை...

உயிரோடு.......!!!!!!!!!!!!!!!

இதுதானே வெற்றியின் ரகசியம்........!!!!!!!





வந்தாச்சு மரபு வழி விதைகள்.....

விதைகள் கருவுக்கு சமம்.....

அது பிறந்து.....

ஆரோக்கியமாக வளர்ந்து....

தலை நிமிர நடப்பது (விளைச்சல்) ......

நம் திறமையால் அல்ல....

இறைவன் கருணையால்......

பூச்சி,சத்து குறைபாடு, போன்ற தொல்லை இல்லாமல்....

என் கருக்களை காத்தருள்வாய் இறைவா.....




Friday 26 February 2016

பாரம்பரியம்.....1

தினம் ஒரு சிந்தனை.....

பாரம்பரியமும்.....நவீனமும்......

நாம் வாழ்வது நவீனமான உலகில்......

ஆனால் நம்மை....நம் உடலை....நம் மனதை....

தடம் புரளாமல் காக்க வேண்டி......

நம் முன்னோர்கள்....
தம் அனுபவ அறிவால் வரையறுத்து சென்றவற்றை பாரம்பரியம் என்போம்.....

நவீனத்தின் வேகத்தில் சிக்குண்டு ...அதைவிட வேகமாக நம் பாரம்பரியத்தை இழந்துகொண்டு வருகிறோம்.....

இது மன்னிக்க முடியாத குற்றம்....

அடுத்த தலைமுறைக்கு இதை மாற்றமோ, சேதமோ இல்லாமல் கடத்த வேண்டியது நம் கடமையல்ல...கடன்....

பொறுப்பற்ற நமக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக நம் முன்னோர்களின் அற்புத வாழ்க்கை முறையை......
கற்பதல்ல...
அறிந்து கொள்ளக்கூட  முடியாத தண்டனையை நம் பிள்ளைகளுக்கு தரலாமா.....

நம்மிடம் இருந்தால்தானே ....நம்மை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ள .....

சரி....எது நவீனம்......எது பாரம்பரியம் .....

நவீனம் என்ற பெயரில் பழையவை மொத்தமும் மூடநம்பிக்கை என எதிர்ப்பது....

பாரம்பரியம் என்ற பெயரில் நவீன கால மாற்றங்கள் எல்லாவற்றையும் தவிர்க்க முடியுமா என்ற விதண்டாவாதம் செய்வது....

இரண்டுமே முட்டாள்தனம்.....

மண்பானை தண்ணீரை விட்டுவிட்டு , பியூரிபையர் தண்ணீருக்கு காசு செலவு செய்யும் நவீனம் முட்டாள்தனம்.....

நவீன மருத்துவ முறைகள்,சேவைகளை மறுக்கும் பாரம்பரியம் முட்டாள்தனம்......

நேற்று என் மனைவிக்கும் எனக்கும் ஒரு வாக்குவாதம்.....

நன்றாக நுரை வந்தால்தான் அழுக்கு போகும்....இது அவள் கருத்து.......

நான் முன்பே கூறியதைப் போல் கடந்த சில வாரங்களாக சோப் இல்லாத குளியல்தான் என்னுடையது ....ஆரம்பத்தில் சீகக்காயை உடம்பில் தேய்த்து குளித்தேன்....

பின்னர் நாட்டு மருந்து கடையில் தேடி ஒரு பொடியை வாங்கிவந்துள்ளேன்....

இதில் இருப்பதாக கடைகாரர் சொன்னவற்றுள் சில....

கஸ்தூரி மஞ்சல்....
விளாமிச்சை வேர்....
காய்ந்த ரோஜா இதழ்கள்...
கோரை கிழங்கு ....
வெட்டிவேர்....
கார்போக அரிசி....
ஏலரிசி....

இன்னும் சில பெயர்களை கூறினார் நினைவில்லை...விலை..100கிராம் 80 ரூபாய்.

இதை போட்டு குளித்தால் நுரை வருவதில்லை....மூலிகை வாசனை வரும்....

கடந்த பத்து நாட்களாக இப்படிதான் குளிக்கிறேன்...

தளும்பும் நுரையோடும் வாசனையோடும் இருக்கும் சோப்பு குளியலுக்கும்,இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

(சோப்பை  விட அற்புதம் என மிகைப்படுத்தி சொல்ல விருப்பமில்லை)

இப்போது என் உடலில் அழுக்கில்லை....
நாற்றமில்லை .....
என்னை பார்க்கும் யாரும்,இன்று குளிக்கவில்லையா என கேட்பதும் இல்லை...


சோப்பு என்ற நவீனம் என் வாழ்வில் வந்து புதிதாக சாதித்தது என்ன......

இந்த என் கேள்விக்கு என் மனைவிடம் பதில் இல்லை....அவள் என் வாதத்தை ஏற்கவும் இல்லை....

நாளைமுதல் முகத்திற்கு மட்டும்....என்று கொஞ்சம் இறங்கியிருக்கிறாள்....

ஆனால் எங்கள் பேச்சை என் மகன் உன்னிப்பாக கவனித்தான் .......

அதுதானே எனக்கு வேண்டும்......

நாளை சமையல் எண்ணைய் பற்றி......

Saturday 20 February 2016

நானும் இனி விவசாயி......

இதோ.......

இன்று முதல் நானும் ஒரு விவசாயி.....

மண்ணை கலந்தேன்.....

மண்ணோடு கலந்தேன்....மனதால்....

விதைக்காக வெயிட்டிங் ....

ஒட்டன்சத்திரம் பரமேஸ்வரன் என்ற இளைஞர், பாரம்பரிய மரபு காய்கறிகளின் விதைகளை அரும்பாடுபட்டு தேடித்தேடி சேகரித்து....விற்பனையும் செய்து வருகிறார்...

தோட்டம் சிவா மூலம் கிடைத்த அறிமுகம் ....

அறிய வகை காய்கறிகள்...பூச்செடிகள்....மூலிகைகள் என 60 வகை விதைப் பைகள்....

தபால் செலவோடு ரூ.650....

பணம் அனுப்பி ...வரவுக்காக காத்திருக்கிறேன் ....

அதற்குள் வளர்ப்பு பைகளை இன்று தயார் செய்து விட்டேன்....

இரண்டு பங்கு தேங்காய்நார் கழிவு.....
இரண்டு பங்கு மண்புழு உரம்.....
ஒரு பங்கு செம்மண்.....

நான் வளர்க்கப்போவது, எனக்கு விளைச்சலை தரும் செடிகள் அல்ல.....

என்னோடு உறவாடி மகிழப்போகும் இன்னொரு உயிர்.....


Wednesday 17 February 2016

தினம் ஒரு சிந்தனை ....

நன்றி சிவா....

விதை விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ.....

பரவாயில்லை...வரும் விதைகளை முடிந்தவரை, முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கிறேன்.....

உங்கள் ஆலோசனைக்கு நன்றி....

மனைவிக்கு ஆர்வம் குறைவு....
தட்டி கழிக்க ஆயிரம் காரணங்கள்....

வீட்டு ஓனரின் 4 வயது பேரன் விடமாட்டான் ...பிய்த்து போட்டுவிடுவான்....வீணாக போகும்....

நான் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை....

மனித இயல்பு.... ஒரு புதிய விஷயத்தை ஏற்றுக்கொள்வதில், எப்பொழுதுமே ஒரு தயக்கம், ஒரு எதிர்மறை எண்ணம் வரத்தானே செய்யும்....

சிவா...

இந்த மரபு வழி விதை மூலம் செடி வளர்ப்பதில் எனக்கு மேலும் பல எண்ணங்கள் மனதில் ஊசலாடுகிறது.....

சேமிப்பு சம்பாத்தியத்திற்கு சமம் என கூறுவார்கள்....

ஆனால் நம் முன்னோர் பயன்படுத்திய நாட்டு பயிர் வகைகள் இப்போது இல்லவேயில்லை என்பதை நினைக்கும்போது....

நாம் எப்பேர்பட்ட அலட்சியமான, வெட்கப்பட வேண்டிய தலைமுறையாக இருக்கிறோம் என வருத்தமாக இருக்கிறது....

இனி ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் அந்த பாரம்பரிய நெல், காய்கறிகளை பணத்தை கொண்டு காற்றில் உருவாக்க முடியாதே....

நம் கண்முன் சிரித்து பேசி விளையாடிய ஒரு உயிர் இறந்தால், இனி அவன் திரும்ப வரவே மாட்டான் என்ற உண்மை எப்பேர்ப்பட்ட வலியை தரும்....

நினைத்து பார்த்தால் அப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது....

சம்பாதிக்க இயலாதது மட்டுமல்ல ...தந்தை பாடுபட்டு சேர்த்து வைத்த சொத்தையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஊதாரி பிள்ளையாக உருவகப்படுத்தி கொள்கிறேன் நம்மை....

சமூக,அரசியல்,வியாபார உந்துதலால்...

விதை முதல்,விளைச்சலின்போது தேவைப்படும் உரம்,பூச்சி கொல்லி வரை அனைத்தையும் சொந்தமாக உற்பத்தி செய்துகொள்ளும் பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டு....

கரும்பு போன்ற பணப்பயிர்களின் பின் ஓடி...ஓடி....

இன்று ஓடவும் தெம்பின்றி...ஒதுங்கவும் வழியின்றி...மூச்சிரைத்து நிற்கிறது இன்றைய விவசாய தலைமுறை .....

விவசாயத்திற்கு முதல் மூலதனம் விதை...

தான் விளைவித்ததில் இருந்து விதையை சேமிக்க கூட மறந்து போய் கடையில் கையேந்துகிறது 80 சதவிகித விவசாயிகளை கொண்ட நாடு....

விதை எடுத்து, அதை பல போகங்கள் வரை வீரியம் குன்றாமல் பாதுகாத்து பயன்படுத்த பல அற்புத வழிமுறைகள் இருந்திருக்கிறது....

அது எதுவும் தெரியாது,தெரிந்தாலும் செய்வதற்கான நேரமில்லை இன்றைய நவீன விவசாயிக்கு....

அப்படி விதை நெல்லை சேமிக்க தவறியதன் விளைவுதான், இன்று பல பயிர் ரகங்கள் அழியக் காரணம்....

சரி.... நம்மை போன்ற சிலர் வீட்டு தோட்டத்திலும்,மொட்டைமாடியிலும்
மிகச் சிறிய அளவில் விளைவிப்பதன் மூலம் இந்த ஒட்டுமொத்த தேசமும் மாறி விடுமா....

சமூகம் என்ற வார்த்தை மாயதோற்றம்....

இருப்பதெல்லாம் தனிமனிதர்களே....

நாம் விரும்பும் சமூக மாற்றம், நமக்கு தேவையெனில், அதை முதலில் தொடங்கும் கடமை நமக்குதான் இருக்கிறது....

அப்படி நினைத்து செயல்பட்ட பரமேஸ் போன்ற சிலரால்தானே கிடைக்கும் கொஞ்சம் மரபு ரகங்களும் அழிவிலிருந்து தப்பியிருக்கிறது....

ஒட்டுமொத்த சமூகம் மாறுவதை பற்றி எனக்கு கவலையில்லை.....

நான் செய்வதை பார்த்து என் மகன் செய்வான்....

அவனை பார்த்து அவன் மகன்,மகள்கள் மாறுவார்கள்....

அவர்களை பார்த்து என் பரம்பரையே மாறும்....

அதனால்.......

இதோ நான் விதைக்க தொடங்கப்போகிறேன்.....

நான் விவசாயி இல்லை...பல நூறு ஆண்டுகளாக பித்தளை பாத்திரங்களை உற்பத்தி செய்து விற்கும் வியாபார பரம்பரை....

ஆனால் ஏனோ இந்த பசுமை மீது இனம்புரியாத காதல்....

உங்கள் மீது முதல் பார்வையிலேயே அதீத ஒட்டுதல் வந்ததற்கும் அதுதான் காரணம்....

என் அந்திம காலத்தில்....வசதியும்,வாய்ப்பும் அமைந்தால் ஏதோ ஒரு இடத்தில் சில செண்டாவது நிலம் வாங்கி பயிர் செய்ய வேண்டும்....

விளைச்சலை பற்றி கவலைப்படாமல், விளைவிப்பது ஒன்றே நோக்கம் என விவசாயம் செய்ய வேண்டும்.....

பார்ப்போம்.....

மீண்டும் சந்திப்போம்.....

மகா.சுரேஷ்.
மிட்டூர்.