Wednesday, 17 February 2016

தினம் ஒரு சிந்தனை ....

நன்றி சிவா....

விதை விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ.....

பரவாயில்லை...வரும் விதைகளை முடிந்தவரை, முழுமையாக பயன்படுத்த முயற்சிக்கிறேன்.....

உங்கள் ஆலோசனைக்கு நன்றி....

மனைவிக்கு ஆர்வம் குறைவு....
தட்டி கழிக்க ஆயிரம் காரணங்கள்....

வீட்டு ஓனரின் 4 வயது பேரன் விடமாட்டான் ...பிய்த்து போட்டுவிடுவான்....வீணாக போகும்....

நான் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை....

மனித இயல்பு.... ஒரு புதிய விஷயத்தை ஏற்றுக்கொள்வதில், எப்பொழுதுமே ஒரு தயக்கம், ஒரு எதிர்மறை எண்ணம் வரத்தானே செய்யும்....

சிவா...

இந்த மரபு வழி விதை மூலம் செடி வளர்ப்பதில் எனக்கு மேலும் பல எண்ணங்கள் மனதில் ஊசலாடுகிறது.....

சேமிப்பு சம்பாத்தியத்திற்கு சமம் என கூறுவார்கள்....

ஆனால் நம் முன்னோர் பயன்படுத்திய நாட்டு பயிர் வகைகள் இப்போது இல்லவேயில்லை என்பதை நினைக்கும்போது....

நாம் எப்பேர்பட்ட அலட்சியமான, வெட்கப்பட வேண்டிய தலைமுறையாக இருக்கிறோம் என வருத்தமாக இருக்கிறது....

இனி ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் அந்த பாரம்பரிய நெல், காய்கறிகளை பணத்தை கொண்டு காற்றில் உருவாக்க முடியாதே....

நம் கண்முன் சிரித்து பேசி விளையாடிய ஒரு உயிர் இறந்தால், இனி அவன் திரும்ப வரவே மாட்டான் என்ற உண்மை எப்பேர்ப்பட்ட வலியை தரும்....

நினைத்து பார்த்தால் அப்படி ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது....

சம்பாதிக்க இயலாதது மட்டுமல்ல ...தந்தை பாடுபட்டு சேர்த்து வைத்த சொத்தையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஊதாரி பிள்ளையாக உருவகப்படுத்தி கொள்கிறேன் நம்மை....

சமூக,அரசியல்,வியாபார உந்துதலால்...

விதை முதல்,விளைச்சலின்போது தேவைப்படும் உரம்,பூச்சி கொல்லி வரை அனைத்தையும் சொந்தமாக உற்பத்தி செய்துகொள்ளும் பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டு....

கரும்பு போன்ற பணப்பயிர்களின் பின் ஓடி...ஓடி....

இன்று ஓடவும் தெம்பின்றி...ஒதுங்கவும் வழியின்றி...மூச்சிரைத்து நிற்கிறது இன்றைய விவசாய தலைமுறை .....

விவசாயத்திற்கு முதல் மூலதனம் விதை...

தான் விளைவித்ததில் இருந்து விதையை சேமிக்க கூட மறந்து போய் கடையில் கையேந்துகிறது 80 சதவிகித விவசாயிகளை கொண்ட நாடு....

விதை எடுத்து, அதை பல போகங்கள் வரை வீரியம் குன்றாமல் பாதுகாத்து பயன்படுத்த பல அற்புத வழிமுறைகள் இருந்திருக்கிறது....

அது எதுவும் தெரியாது,தெரிந்தாலும் செய்வதற்கான நேரமில்லை இன்றைய நவீன விவசாயிக்கு....

அப்படி விதை நெல்லை சேமிக்க தவறியதன் விளைவுதான், இன்று பல பயிர் ரகங்கள் அழியக் காரணம்....

சரி.... நம்மை போன்ற சிலர் வீட்டு தோட்டத்திலும்,மொட்டைமாடியிலும்
மிகச் சிறிய அளவில் விளைவிப்பதன் மூலம் இந்த ஒட்டுமொத்த தேசமும் மாறி விடுமா....

சமூகம் என்ற வார்த்தை மாயதோற்றம்....

இருப்பதெல்லாம் தனிமனிதர்களே....

நாம் விரும்பும் சமூக மாற்றம், நமக்கு தேவையெனில், அதை முதலில் தொடங்கும் கடமை நமக்குதான் இருக்கிறது....

அப்படி நினைத்து செயல்பட்ட பரமேஸ் போன்ற சிலரால்தானே கிடைக்கும் கொஞ்சம் மரபு ரகங்களும் அழிவிலிருந்து தப்பியிருக்கிறது....

ஒட்டுமொத்த சமூகம் மாறுவதை பற்றி எனக்கு கவலையில்லை.....

நான் செய்வதை பார்த்து என் மகன் செய்வான்....

அவனை பார்த்து அவன் மகன்,மகள்கள் மாறுவார்கள்....

அவர்களை பார்த்து என் பரம்பரையே மாறும்....

அதனால்.......

இதோ நான் விதைக்க தொடங்கப்போகிறேன்.....

நான் விவசாயி இல்லை...பல நூறு ஆண்டுகளாக பித்தளை பாத்திரங்களை உற்பத்தி செய்து விற்கும் வியாபார பரம்பரை....

ஆனால் ஏனோ இந்த பசுமை மீது இனம்புரியாத காதல்....

உங்கள் மீது முதல் பார்வையிலேயே அதீத ஒட்டுதல் வந்ததற்கும் அதுதான் காரணம்....

என் அந்திம காலத்தில்....வசதியும்,வாய்ப்பும் அமைந்தால் ஏதோ ஒரு இடத்தில் சில செண்டாவது நிலம் வாங்கி பயிர் செய்ய வேண்டும்....

விளைச்சலை பற்றி கவலைப்படாமல், விளைவிப்பது ஒன்றே நோக்கம் என விவசாயம் செய்ய வேண்டும்.....

பார்ப்போம்.....

மீண்டும் சந்திப்போம்.....

மகா.சுரேஷ்.
மிட்டூர்.

No comments:

Post a Comment